சென்னை: நாளை (சனிக்கிழமை) திமுக எம்.பி.க்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதில், நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவர், மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நடந்து முடிந்த 18வது மக்களவைக்கான  தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.   மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையவிருந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் 99 இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால், எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி இண்டி கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி அந்த பதவி திமுகவுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,   புதிதாக வெற்றி பெற்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6.30 மணிக்கு திமுக தலைமை அலுவலகமாக அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். இதில், புதிதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவரையும் நாளை நடைபெறும் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 திமுகவின்  நாடாளுமன்ற குழு தலைவராக தற்போது, திமுக பொருளாளராக உள்ள டி.ஆர்பாலு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள எம்.பிக்கள் கூட்டத்திலும் டி.ஆர்.பாலுவே திமுக நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். அத்துடன்,  நாடாளுமன்ற ள் குழுவின் துணைத் தலைவராக  கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும்,  நீலகிரி எம்.பியான ஆ.ராசா திமுக மக்களை உறுப்பினர் குழுவின் கொறடாவாக நாளைய கூட்டத்தில் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும்,   40க்கு 40 தொகுதிகளை வென்றுள்ள திமுகவிற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அப்படி கொடுக்கப்பட்டால், எதிர்க்கட்சி துணைத் தலைவராக டி.ஆர்.பாலுவே இருப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.