சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. இந்து கடவுகள் குறித்து தவறான விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் பேசி 24மணிநேரம் கூட ஆகாத நிலையில், தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. இந்துமதம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார். இவர் இந்து மதங்களையும், இந்து மத சடங்குகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், இவர்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், மற்ற மதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டேலே, உடனே சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் நடிகர் கனல்கண்ணன், சமூக வலைதளங்களில் வெளியான ஒரு மதம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார். இது சர்ச்சையானது.
இந்த பரப்பான சூழலில்தான், நேற்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, சமூக வலைதளங்களில் சாதி, மதம் ரீதியாக விமர்சிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள்தான் சமூக நீதியை கெடுக்க காரணமாக இருக்கிறார்கள். அவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் சொகுசாக உட்கார்ந்து கொண்டு இது போன்ற வன்மங்களை விதைப்பவர்கள் தப்பி விடுவார்கள். இப்படி நச்சுக்கருத்துகளை பரப்புவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
முதலமைச்சர் பேச்சு வீடியோ:
முதலமைச்சர் ஸ்டாலின் பேசி 24மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள், இந்து தெய்வங்களான சிவன் பார்வதி குறித்து சர்ச்சைக்குரிய பதிவை போட்டு, மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் திமுக தருமபுரி மாவட்ட எம்.பி. செந்தில் குமார்.
அவரது டிவிட் பதிவில், சிவன் மற்றும் பார்வதிக்கு வட மாநிலங்களில் விநாயகர் என்ற ஒரு பிள்ளை மட்டும் உண்டு என்றும் தென் மாநிலங்களில் மட்டும்தான் முருகன் இருக்கிறார் என்றும் அப்படி என்றால் வட மாநிலங்களில் சிவன் பார்வதிக்கு விநாயகர் பிறந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு நடத்தப்பட்டதா என்றும் தர்மபுரி எம்பி செந்தில்குமார் கூறியிருக்கிறார்.
செந்தில்குமார் எம்.பி.யின் கருத்து, கடும் விமர்சனங்களை ஏற்படத்தி உள்ளது. முதலமைச்சரின் கருத்தை சற்றுகூட காதில் வாங்காமல் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பே அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நேரத்தில் மட்டுமே ஹிந்துக்களுக்கு திமுக ஆதரவு என்று கூறி தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் இந்துக்களுக்கு எதிராக பேசுவதை திமுகவினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், செந்தில்குமார் எம்.பி. விளக்கம் அளித்துள்ளர். அதில், தென் மாநிலத்தில் மட்டும்தான் சிவன் பார்வதியின் மகனாக முருகன் அறியப்படுகிறார் என்றும் வட மாநிலங்களில் விநாயகர் மட்டுமே சிவன் பார்வதி மகனாக உறுதி செய்த நிலையில் அதை சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறினேன் என்றும் எந்த கடவுளையும் இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை என்றும் செந்தில்குமார் எம்பி விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா ? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன் என பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பொதுமக்களும், தமிழக முதல்வர் கூறுவது உண்மை என்றால், உடனே செந்தில்குமார் எம்.பி. கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.