சென்னை: முறைகேடாக சொத்து குவித்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பி ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்.பி. ராசா, ஐக்கிய முன்னணி தலைமையிலான ஆட்சியின்போது, அதாவது கடந்த 2004 – 2007 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய சுற்றுசூழல் அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவர் வருமானத்தை மீறி, ஊழல் செய்து, கோயம்புத்தூரில் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும், அந்த நிலம் பினாமி நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இந்த நிலத்தை வாங்க, ராசா, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு சாதகமாக சுற்றுசூழல் சான்று வழங்குவதற்காக லஞ்சமாக பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் ஆ.ராசா பினாமி நிறுவனத்தின் பெயரில் 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த ரூ.55 கோடி மதிப்பிலான இந்த நிலம் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து எனவும், எனவே அதை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆ.ராசாவி தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் நிறுவனம் தொடங்கியதில் இருந்து எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் நிறுவனத்தில் பெறப்பட்ட முழுப் பணமும் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் இருந்து பெறப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575 சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. மேலும், இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் 2004-2007 காலகட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, கோவையில் பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
[youtube-feed feed=1]