சென்னை: தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய  ரூ. 12, 110 கோடி அளவிலான கடன்கள்  தள்ளுபடி செய்யப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது குறித்து, திமுக எம்.பி. கனிமொழி கிண்டல் செய்து டிவிட்பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110  கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி, பழனிசாமி, கொரோனா, புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில், ரூ. 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும்,  இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவித்தார்.

முதல்வர் அறிவிப்புக்கு விவசாயிகள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக,  மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் , திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய மற்றும் கல்வி கடனை முற்றுலுமாக ரத்து செய்யும் என்று கூறியிருந்தார். இதனால், ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்தே முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி அறிவித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதல்வரின் விவசாய கடன் தள்ளுபடி குறித்து, திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில்  கலாய்த்துள்ளார்.

அவரது பதிவில், , ““அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி” தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.