சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து  ஜனநாயக  கடமையை நிறைவேற்றினார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அத்துடன்  30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 1. 60  லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ  வாக்களித்தார். அவருடன் வந்திருந்த அவரது மனைவி கிருத்திகா உதயநிதியும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.