சென்னை:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்ற இறந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல், அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கன்னம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்ற வந்த ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட மூத்த தலைவர்கள் மருத்துவமனைக்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், கொரோனா தொற்றால் அவர் உயிரிழந்ததால், சட்ட விதிகளின்படி, அவரது  உடல் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அவரது உடல் முழுவதுமாக மூடப்பட்டு சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள மகாலட்சுமி தெருவில் இருக்கும் வீட்டுக்கு ஜெ. அன்பழகன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்தப்பகுதி பொதுமக்கள் சிறிது நேரம் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அங்கிருந்து  தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் காரணமாக அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். ஆனால், அவர்களை அருகே அனுமதிக்காத காவல்துறையினர், கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரண ஆடை அணிந்திருந்த நான்கு பேர் மட்டுமே, அவரது உடல் இருந்த சவப்பெட்டியை தொட அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் ஆம்புலன்சில் இருந்து அன்பழகன் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை இறக்கி , அங்கு ஏற்கனவே அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகே ஜெ. அன்பழகன் உடல் அடக்கம் செய்ய தோண்டப்பட்டிருந்த குழியில்  அவரது உடல் மிகவும் பாதுகாப்பான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடலும் புதைக்கப்பட்டது.நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஏராளமான திமுகவினர் கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.