சிவகங்கை: பேரூராட்சி டெண்டர் கொடுக்காத அதிகாரியை இரும்பு சேரால் தாக்க முயன்ற திமுக பிரமுகர், அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை அருகேயுள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக ஓன்றிய துணைச் செயலாளரான இவர், ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.  கடந்த 26-ம் தேதி சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியை இவர் இருக்கையைத் தூக்கி தாக்க முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த அதிகாரி காவல்துறையில் புகார் அளித்ததுடன், மற்ற ஊரியர்களும் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

சிவகங்கை அருகே உள்ள பெருங்குடி ஊராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முருகன், பணி முடிந்துவிட்டதாகவும், பணத்தை விடுவிக்குமாறும், பணியிலிருந்த ஊராட்சி மன்ற உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியிடம்  கேட்டுள்ளார். பணி அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருமாறு உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரி தெரிவித்ததால், முருகன் கோபமடைந்து வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகன், அங்கிருந்த இரும்பு நாற்காலியை எடுத்து, கிருஷ்ண குமாரியைத் தாக்க முயன்றார். அலுவலக ஊழியர்கள் முருகனை தடுத்து வெளியே அழைத்து வந்தனர்.

காண்ட்ராக்டர், பெண் அதிகாரியை தாக்க முயன்றதைக் கண்டித்தும், தாக்க முயன்ற முருகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, வேறு வழியின்றி,  சிவ கங்கை நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகனைத் தேடி வருவதாக கூறினார். இந்த நிலையில்,  தலைமறைவாக இருந்த முருகனை போலீஸார்  கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.