காஞ்சிபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்  ஆகிய 3 பேரூராட்சிகளிலும் திமுகவே அதிகமான இடங்களில் வெற்றி பெற்று வசப்படுத்திஉள்ளது.

தமிழ்நாடு முழுவதும பிப்ரவரி 19ந்தேதி தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி,  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும 268  மையங்களில்  நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் ஆகிய 3 பேருராட்சிகளிலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 3 பேரூராட்சிகளையும் திமுகவே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 81 பேர் போட்டியிட்டனர்.25 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 22,395 வாக்காளர்களில் 15,470 பேர் வாக்களித்திருந்தனர். வாக்குப்பதிவு சதவிகிதம் 69.08 ஆகவும் இருந்தது. வாக்கு எண்ணிக்கையில் திமுக 6, அதிமுக 3, காங்கிரஸ் 1, பாமக 1, சுயேச்சைகள் 4 பேர் உட்பட திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மட்டும் 4 சுயேச்சைகள் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு 17 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. 14,094 வாக்காளர்களில் 10,861 நபர்கள் வாக்களித்திருந்தனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு மட்டும் வாக்குப்பதிவு சதவிகிதம் 77.06 வார்டு உறுப்பினர்கள் 15 பதவிகளுக்கு 58 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் திமுக 10, அதிமுக 5 என்ற விகிதத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 74 பேர் போட்டியிட்டனர்.27 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.22041 வாக்காளர்களில் 16762 பேர் வாக்களித்திருந்தனர்.வாக்குப்பதிவு சதவிகிதம் 76.05 சதவிகிதம்.வாக்கு எண்ணிக்கையின்படி திமுக 14,அதிமுக 3,பாமக 1 உட்பட திமுக அதிகமான இடங்களை பிடித்து உத்தரமேரூர் பேருராட்சியை கைப்பற்றியிருக்கிறது.