சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்து உள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். மாநிலம்  முழுவதும் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. அதில்,

நாடாளுமன்றத் தேர்தலில் தென்மாநிலங்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளதுடன்,  தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா  கூட்டணி கைப்பற்றும் என இந்தியா டுடே – சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதுபோல கர்நாடகாவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 24 இடங்களையும், இந்தியா கூட்டணி 4 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திராவில், இந்த முறை மொத்தமுள்ள 25 தொகுதிகளில்  தெலுங்குதேசம் அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், தெலுங்குதேசம் பாஜக கூட்டணி 17 இடங்களையும், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி  304 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து உள்ளதுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 71 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 168 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்து உள்ளது.