திருவள்ளூர்: திமுக இந்துகளுக்கு எதிரி அல்ல என்று சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,  திமுக இந்துகளுக்கு எதிரான கட்சி என்பதுபோல சிலர் பேசி வருகிறார்கள். அவர்கள் திட்டமிட்டு வீண் பழி சுமத்தி வருகிறார்கள். ஆனால், திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று கூறியவர், தன்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது.

திமுகவையும், நம்மையும், ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல் சித்தரிக்கிறார்கள். “கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பராசக்தியில் சிவாஜி அவர்களது முதலாவது வசனத்திலேயே சொன்னார்கள். ”அதைத்தான் இன்று நாமும் பின்பற்றி கொண்டிருக்கிறோம்.

அதைப் புரிந்துகொள்ளாமல் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்டு தி.மு.க. ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.” என்னதான் திட்டமிட்டு சதி செய்து தி.மு.க. மீது பழி சுமத்திக் கொண்டு இருந்தாலும், அவையெல்லாம் எடுபடாது என்பதை எதிர்வரும் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபித்துக்காட்டத்தான் போகிறார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.”

”நான், பதிமூன்று வயது மாணவனாக இருந்தபோது கோபாலபுரம் பகுதியில் முடி திருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க. என்ற படிப்பகத்தைத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, கட்சிப் பணி, இளைஞரணி செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், இன்றைக்கு உங்களில் ஒருவனாக இருந்து தலைவராக இருக்கக்கடிய பெரும் பொறுப்பை பெற்றிருக்கிறேன், இதெல்லாம் வரலாறு! ஏதோ வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.   அரசியலில் என் வரலாறு ஐம்பது ஆண்டுகாலம் என்பதை வாரிசு அரசியல் என்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். அதனால் தான் இதையெலலாம் சொன்னேன்; வேறல்ல!”

”இப்போது சொல்கிறேன். இன்னும் நான்கு மாதங்கள்தான். பொறுங்கள். நான்கு மாதங்களில் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது. வந்தவுடன், விவசாயிகளினுடைய கூட்டுறவுக் கடன் அத்தனையும், எப்படி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ரத்து செய்தாரோ அதேபோல் ரத்து செய்யப்படும்.

அதேபோல் நகை கடன். குடும்பத்தின் சூழல் காரணமாக – வறுமையின் காரணமாக தாய்மார்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கிகளில் வைத்திருக்கிறார்கள், இன்னும் மீட்க முடியவில்லை; வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அதனால்தான் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது சொன்னேன். அதன்படி 5 சவரன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்வோம். ”

இவ்வாறு அவர் கூறினார்.