சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறி திமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் மத்தியஅரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என மத்தியஅரசு மீது திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், துறை வாரியாக நிதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தநிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் ஜூலை 27ந்தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் திமுக தலைமை அறிவித்தது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜ ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் திமுக ஆர்ப்பாட்டம், வடசென்னையில் அமைந்துள்ள சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையேற்றார். அவருடன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா? என மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் முழக்கம் எழுப்பினர்.
அதுபோல, சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திலும் , மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தாம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலஷ்மி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.