சென்னை: ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய் என திமுக அரசு மீது குற்றம் சாட்டினார்.

வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் இன்னும் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு மும்முரமாக செய்து வருகிறது.

சென்னையில் மழைநீர் தேங்குவதை மாநகராட்சி அதிரடியாக அகற்றி வரும் நிலையில், குறிப்பாக சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்குவதை உடனுக்குடன் அகற்றி போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்கி உள்ளது. மேலும் மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டு உள்ள நிலையில், புறநகர் மற்றும் உள்பகுதிகளில் மழைநீர் அகற்றும்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் சில இடஙக்ளில் மழைநீர் முழுதாக வடியாமல் இருந்து வருகிறது. அப்படி தேங்கி இருக்கும் பகுதிகளுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார் முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என அமைச்சர்களும், அதிகாரிகளும் பொய் சொல்கின்றனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை. பல பகுதிகளில் மழைநீர் வடியாததால் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர், சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் முழுவதும் அமைக்கப்பட்டு மழை நீர் தேங்காத வண்ணம் உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். 500 வீடுகள் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் முதலமைச்சர் வந்து பார்க்கவில்லை. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கவில்லை.

இந்த பகுதிகளை அமைச்சர்கள் வந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றவர்,  சென்னையில்அவசர கோலத்தில் திட்டமிடாமல் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டதால்தான் மழைநீர் தேங்குகிறது. முறையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.  சென்னையில் மிதமான மழையே பெய்துள்ளது. பெரிய அளவில் மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.