திருவண்ணாமலை

திமுக ஆட்சி ஆன்மீகத்துக்கு எதிரானது இல்லை என அமைச்சர் எ வ வேலு கூறி உள்ளார்.

இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் டாக்டர் மீனாட்சி சுந்தரம், ராஜா ராம், கோமதி குணசேகரன், பெருமாள் ஆகியோர் அறிமுக விழா நடைபெற்றது.

ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கிய இந்தவிழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்

அமைச்சர் தனது உரையில்,

”கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்தபோது அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுச் சிறப்பாக 5 ஆண்டுகள் பணியாற்றினார்கள். அதைத்தொடர்ந்து மீண்டும் அண்ணாமலையார் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிப்பதற்கு இந்த அரசுக்கு வாய்ப்பு கிடைத்து புதிய அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடந்து கொண்டிருக்கிற முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆன்மிகத்திற்கு எதிரான அரசு அல்ல ஒரு நாளும் ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் ஒரு நாளும் பிரிக்க முடியாது.

பாஜக ஆட்சியில் அண்ணாமலையார் கோவிலைத் தொல்பொருள் துறை கையகப்படுத்தி நடவடிக்கை எடுத்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி,” எனக்கு சாமி நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனவே அண்ணாமலையார் கோவிலை மீட்டுத் தருவேன்” என்று சொன்னார்.

என்னைப் பலமுறை டில்லிக்கு அனுப்பி மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருடன் பேசி இந்த திருக்கோவிலை அவர் மீட்டு தந்தார். ஆகவே திமுக ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல.”

என்று கூறி உள்ளார்.