சென்னை: யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது  என்று கூறிய  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  ஆளுநர் உரையை வாசிக்காமல் செல்ல  திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள், இந்த அரசை நம்பி பலன்  இல்லை  என சரமாரியாக  குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து திடீரென வெளியேறினார். சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் கூறி அவையில் இருந்தே வெளியேறினார்.

முன்னதாக அவைக்கு வந்த ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், தவாக கட்சி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.  அண்ணா பல்கலை. சம்பவத்துக்கு வேந்தரான ஆளுநர் ரவி பொறுப்பேற்க வேண்டும் என்று வேல்முருகன் எம்எல்ஏ முழக்கமிட்டார். இதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து, யார் அந்த சார் என்ற பேட்ஜுடன் அவைக்கு வந்த அதிமுகவினர், தாங்கள் கொண்டு வந்த பதாதைகளுடன், தமிழ்நாடு அரசுக்கு எதிராக  அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷம் எழுப்பினர். அவர்களை சபாநாயகர் எச்சரித்தும், அதை கண்டுகொள்ளாதநிலையில்,அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர்,  சட்டப்பேரவைக்கு வெளியே  யார் அந்த சார் என்ற சட்டையை அணிந்தபடி வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், பதாகைகளுடன் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதையடுத்து,  செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ” கஞ்சா போதையால் தமிழகத்தில் பல இளைஞர்கள் பாதிக்கப்படு கிறார்கள். இந்த கஞ்சா போதையால் தான் பெண்கள், வயதான பாட்டிகள் கூட பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள்.  இந்த ஆட்சியில் தான் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடக்கிறது. இது மிகவும் கேவலமான ஒரு விஷயம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ” இன்றயை சட்டப்பேரவை உரை ஆளுநர் உரையாக இல்லாமல் சபாநாயகர் உரையாக மாறிவிட்டது. அதுவும் காற்றடைத்த பலூன் போல் உள்ளது. இந்த உரையில் திமுக சுய விளம்பரம் தேடிக்கொண்டதை தவிற வேறு எதுவும் இல்லை.

அண்ணா பல்கலை சம்பவம் போன்று இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், நாங்கள் பதாகைகளை எடுத்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். யார் அந்த சார், ஏன் இந்த அரசு பதற்றப்படுகிறது. யார் அந்த சார் என்று கேட்டால், இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நாங்கள் வேண்டும் என்றே அரசு கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று பதாகையை தூக்கி கொண்டு போராடவில்லை. இனிமேலும் இந்த அரசு தூங்கக்கூடாது என்பதற்காக தான் போராட்டம் நடத்துகிறோம்.

யார் அந்த சார் என்று கேட்டால் மாற்றி மாற்றி அமைச்சர்கள் அறிக்கைகளை விட்டு கொண்டு இருக்கிறார்கள். சம்பவத்தில் யாரெல்லாம் குற்றவாளியோ அவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்பது தான் அரசின் கடமை”.  இன்றைக்கு பாலியல் வன்கொடுமைக்கு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என்பது தான் இந்த அரசின் கடமை. ஆனால், யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது என்பது தான் மக்களின் சந்தேகம். அதனால் தான், ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யார் அந்த சார் என்று கேட்கும் அளவுக்கு மக்களின் குரல் ஒலித்துக் கொண்டு வருகிறது.

சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியே போகவில்லை, திட்டமிட்டு ஒரு நோக்கத்தோடு செயல்பட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்.  தேசிய கீதம் இசைக்கப்படுவதில், வழக்கமான நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றிலேயே திமுக ஆட்சியில் தான் ஆளுநர் உரையை சபாநாயகரே வாசிக்கிறார்; ஆளுநர் உரையில் எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லை.

தி.மு.க., அரசின் அவலங்களை கவர்னரிடம் மனு கொடுத்தோம். அதன் மீதே இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்ணா பல்கலை மாணவி வழக்கை உயர்நீதிமன்றம்  தானாக முன்வந்து விசாரணையை எடுக்கவில்லை. அ.தி.மு.க., பெண் நிர்வாகி தாக்கல் செய்த ரிட் மனுவின் காரணமாக, குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த அரசை நம்பி பலன் இல்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டமும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன! ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்…