சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்து ஆட்சியை பிடித்த திமுகஅரசு தங்களை ஏமாற்றி விட்டது, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்  பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தலைமைச் செயலலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது,  திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும்,  சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் 20000 ஆசிரியர்கள் கோரிக்கை மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல மாற்றம் செய்யப்படும்,  தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்படும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்,   அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படம் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, அரசு ஊழியர்களுக்கான எந்தவொரு திட்டமும் செயல்படுத்த வில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை என கூறப்படுகிறது. ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு 39கோடி செலவில் நினைவிடம் அமைக்கவும், கருணாநிதி நினைவிடம் எதிரே பேனா சின்னம் அமைக்க ரூ.80 கோடியும் ஒதுக்குவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 311ன் படி, சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அரசு ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  நேற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அகவிலைப்படி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு அலுவலகங்கள் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்,  கடந்த ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்த உடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால்,  அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  திமுக ஆட்சி அமைந்து 20 மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறினர். தங்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியதுடன், அடுத்த முறை திமுக ஆட்சி அமையாத நிலை ஏற்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் தங்களிடம் 6 சதவிகித வாக்கு இருப்பதாக  சுட்டிக்காட்டிவர்கள், அரசு துறையை மனித வள மேம்பாட்டு நிறுவனமாக, அரசு மாற்றியுள்ளதாக விமர்சித்த அவர்கள், நிதியமைச்சர் டிஎன்பிஎஸ்சி தேவையில்லை என கூறுவதாக குற்றம் சாட்டினர்.

சமூக நீதி பேசும் திமுக, கார்பரேட் நிறுவனங்கள் போல் செயல்படுவதாக கடுமையாக விமர்சித்தனர். தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 10ஆம் தேதி மாவட்ட அளவில் பேரணி நடத்தப்படும் என்றும், அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், மார்ச் 28 ஆம் தேதி அரசு அலுவலங்களில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து அரசு செவிசாய்க்கவில்லை என்றால், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தலைமைச் செயலகத்தை அரசு ஊழியர்கள் முற்றுகையிடுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தனர்.