சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ்மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், முதலமைச்சர் குறித்து தவறாக நான் எதுவும் சொன்னதில்லை. நான் எதையும் வெளியிடவில்லை, இது துரதிர்ஷ்டவசமானது  என நட்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இந்துக்களின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் எனவும், இந்துக்களின் வாக்குகள் இல்லாமல் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றும், இந்துக்களின் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை, ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி நட்ராஜ் தனது வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இதை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நட்ராஜ்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி,  முன்னாள் டிஜிபியும், முன்னாள் எம்எல்ஏவுமான   ஆர்.நடராஜ் மீது 7 பிரிவுகளில் சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தன்மீதான புகார் குறித்து ஓய்வுபெற்ற டிஜிபி நட்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைக் கண்டு நான் அதிா்ச்சி அடைந்துள்ளேன். பேஸ்ஃபுக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் நான் தீவிரமாக இயங்கவில்லை. மேலும், எந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவையும் நிா்வகிக்கவில்லை.

நான் கடந்த இரு ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து விலகி, ஏழை மக்களுக்கு சேவை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், குடிமைப் பணி தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறேன். எனது உடல்நிலையைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. வாட்ஸ் அப்பிலும் தீவிரமாக இயங்கவில்லை.  ஆட்சியில் உள்ள பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன்.

பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், நான் ஒருபோதும் போலியான செய்திகளை பரப்பவில்லை. எந்தத் தவறும் செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். பொதுமன்றத்தில், நான் எதையும் வெளியிடவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து நான் அவதூறு கூறியதாக வெளியிடப்பட்ட கருத்துக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் பெயர் எப்படி அதில் இழுக்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அரசியலுக்கு அப்பால் தமிழக முதலமைச்சர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவருக்கு தவறாக தகவல் தெரிவிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு கூறியுள்ளார்.