சென்னை: 4வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை கூறிய நிலையில், தற்போது, சொத்து பதிவு உள்பட பல்வேறு பதிவு கட்டணங்களை மேலும் உயர்த்தி அறிவித்து உள்ளார். ஏற்கனவே சொத்து வழிகாட்டி மதிப்பை உயர்த்திய நிலையில், தற்போது கட்டண உயர்வையும் அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து விற்பனையில், பொது அதிகார ஆவண பதிவு கட்டண உயர்வுக்கானஅரசிதழ் அறிவிப்பை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரும்பாலான இனங்களில், 20 ரூபாய், 50 ரூபாய் என்று இருக்கும் கட்டணங்கள், 1,000 ரூபாயாக மாற்றி அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது. இதற்கான மசோதா, 2023ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, தத்தெடுத்தல் பத்திரத்துக்கான கட்டணம், 100 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிரமாண பத்திரம் பதிவு செய்ய, 20 ரூபாய் கட்டணம், 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பதிவு கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாகவும், நிறுவன பதிவு கட்டணம், 300 ரூபாயில் இருந்தது; தற்போது, 10 லட்சம் ரூபாய்க்கு, 500 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது. ரத்து ஆவண பதிவு கட்டணம், 50 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், வெளியார் பெயரில் பதிவு செய்யப்படும் பொது அதிகார ஆவணத்துக்கான கட்டணம், அந்த சொத்தின் சந்தை மதிப்பில், 1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், குடும்ப உறுப்பினர்களுக்கான பொது அதிகார பதிவு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இது தொடர்பான அரசாணையை, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார்.
பொது அதிகாரம், ஒப்பந்தம் போன்றவற்றுக்கான முத்திரை கட்டணத்தை தமிழக பதிவுத்துறை உயர்த்தி அறிவித்திருக்கிறது. பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரை கட்டணத்தை தமிழக அரசு கடந்த வருடம் சட்டசபையில் உயர்த்தி அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து முத்திரை சட்டத்திலும் நிறைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.. இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பும், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது..
முத்திரைக்கட்டணம் விவரம் :
“தத்தெடுத்தலுக்கு முன்பிருந்த ரூ.100 முத்திரைக் கட்டணமானது ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்து ஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்றும், கிரையபத்திரம் ரத்துக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
சொந்து நகல் பத்திரத்துக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.25 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கிரைய பத்திரம்:
ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரைய பத்திரமாக கருதப்பட்டு வழிகாட்டி மதிப்பில் 7 சதவீத கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சங்கத்துக்கான ஒப்பந்த பதிவுக்கு ரூ. 200 அல்லது ரூ.500 என இருந்த கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொரு பாகத்துக்குமான சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது.
புதிய திருத்தம்:
ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாகப்பிரிவினை செய்யும்போது, அதில் ஒருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராக கருதப்படுவர். ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்த சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அதேபோல, பங்குதாரர் பதிவுக்கான கட்டணமும் ரூ.300-ல் இருந்து ரூ.1000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொது அதிகார பத்திரத்தில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை ஒரே பதிவில் வாங்குவதற்காக வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரம், ஒரு நபர்அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பதிவுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரத்துக்கு ரூ.5 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆக உயர்ந்துள்ளது..
தனிநபர்: 5 நபர்களுக்கு இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ செயல்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் பொது அதிகாரப் பத்திரத்துக்கு முன்பு ரூ.100 முத்திரைக் கட்டணம், இப்போது ரூ.1000 ஆகவும், 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு ரூ.175-லிருந்து ரூ.1000 ஆகவும் முத்திரைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அசையா சொத்துக்கள் விற்பனைக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு சொத்தின் சந்தைமதிப்பில் 4 சதவீதம் என முத்திரைக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அசையா சொத்து விற்பனைக்காக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்குமுத்திரைக் கட்டணம் ரூ.1000, குடும்பத்தினர் அல்லாதவராக இருந்தால் சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடமானம்: சொத்து அடமானத்தை திரும்ப பெறுவதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.1000, பிணை பத்திரத்துக்கு ரூ.80-லிருந்து ரூ.500, செட்டில்மென்ட் திரும்ப பெறுவதற்கு ரூ.80-லிருந்து ரூ.1000 ஆகவும், குத்தகையை ஒப்படைப்பதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.40 லிருந்து ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் ஒரு அறங்காவலரிடம் இருந்து மற்றொரு அறங்காவலர் அல்லது அதே அறக்கட்டளையின் ஒரு பயனாளருக்கு உரிமை மாற்றம் செய்யும்போது ரூ.30 என்றிருந்த முத்திரைக் கட்டணம் ரூ.1000 ஆகவும், அறக்கட்டளை உருவாக்கத்துக்கு ரூ.180 ஆக இருந்த முத்திரைக் கட்டணம் ரூ.1000 என்றும், அறக்கட்டளை கலைத்தலுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.120 லிருந்துரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளத.
இந்த கட்டண உயர்வானது, பொதுமக்களிடையே பெருத்த அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.. இந்த அளவுக்கு முத்திரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டால், வீடு வாங்குபவர்களுக்கு சுமை மேலும் அதிகரிக்கும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.