கோவை: தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறது திமுக அரசு. தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது கோவை நடைபெற்ற பேரணியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியான, பயங்கரவாதி பாஷா மறைவையொட்டி ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசை கண்டித்து, கோவையில் பாஜக தரப்பில் மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணியாக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலதரை போலீஸார் கைது செய்தனர்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக, தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சைக்காக பிணையில் வந்த எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். தொடர்ந்து மறுநாள் அவரது உடல் உக்கடத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக பூ மார்க்கெட் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதி அளித்ததற்கு இந்த கொடூர குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பயங்கரவாதி பாணா இறுதி ஊர்வலத்துக்கு அனுமதியளித்த காவல் துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில், கருப்பு தின பேரணி நடத்தப்படும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணிக் கூட்டம் டிசம்பர் 20ந்தேதி அன்று பிரமாண்டமாக நடந்தது. இந்த பேரணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்து பேசினார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அண்ணாமலை பேசியதைத் தொடர்ந்து, பாஜகவினர் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அங்கு நின்றிருந்த போலீஸார் அவர்களது ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தனர். தொடர்ந்து தடையை மீறி செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்றைய தினம் கோயம்புத்தூரில், கோவை குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்டோம்.
கோயம்புத்தூரில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்துக்குப் பாதுகாப்பும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய எங்களைக் கைதும் செய்து, வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள்.
தீவிரவாதச் செயல்களால், கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயம்புத்தூரில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது திமுக அரசு. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை மனித வெடிகுண்டு தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று பூசி மறைக்கப் பார்த்தது திமுக அரசு. அதற்குத் துணை நின்றது காவல்துறை. ஆனால், என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில், கோவை மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்காகத் திட்டமிடப்பட்ட இடங்கள், அதன் பின்னணியிலிருந்த தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கோயம்புத்தூர் காவல் ஆணையர் அலுவலகமும் ஒன்று. இனியாவது காவல்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்காக திமுக ஆடும் நாடகத்துக்கு, காவல்துறை துணைபோகக் கூடாது.
இவ்வாறு கூறி உள்ளார்.