சென்னை: திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். திமுக உட்கட்சித் தேர்தலை சுமூகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலார் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் 15ஆவது உட்கட்சித்தேர்தல் சென்னையைச் சேர்ந்த மாவட்டங்களின் ஒன்றியங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியங்களுக்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் மூன்று பேர், மாவட்ட பிரதிநிதிகளாக மூன்று பேர், 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களையும், தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.
வேட்புமனுக்களை மாவட்டச் செயலாளர், பொறுப்பாளரிடமோ அல்லது தலைமைக் கழக பிரதிநிதியிடமோ பெற்று, ஆகஸ்ட் 24ஆம் தேதி அளிக்க வேண்டும் என்றும் போட்டியிருக்கும் இடங்களில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
தேர்தல் நடைபெறும் நாட்களில் பிரச்சினைகள் ஏதுமின்றி சுமூகமாக தேர்தல் நடைபெற நிர்வாகிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை வடகிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புழல், சோழவரம் தெற்கு, வில்லிவாக்கம் வடக்கு, சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தாமஸ்மலை தெற்கு, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறும் ” என்று தெரிவித்துள்ளார்.