சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக பிரமுகர் உள்ளிட்ட் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவினர் கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சேலம்  நகரில் தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 64) கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு 10 மணியளவில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் எதிரே உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

சண்முகம் தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து மாரியம்மன் கோவில் வீதி வழியாக தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வீட்டுக்கு சில அடி தூரத்தில் வந்த போது அவரை நோட்டமிட்டபடி 2 மோட்டார் சைக்கிள்களில் சிலர் கும்பலாக எதிரில் திடீரென வந்தனர். அவர்கள் சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மோட்டார் சைக்கிள்களை குறுக்காக நிறுத்தினர்.

அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டியதில் அவரது தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அந்த பகுதியில் உள்ளவர்கள் இதைப் பார்த்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்ததால் கொலையாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

காவல்துறையினர் கொலை குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போ இறங்கியுள்ளனர். தற்போது அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 9 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் சதிஷ் சேலம் மாநகராட்சியின் 55-வது வார்டு கவுன்சிலரின் கணவர் ஆவார். காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், சேலத்தில் ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விற்பனை செய்பவர்கள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், அவர்  கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.  இச்சம்பவத்தில், தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உட்பட ஒன்பது பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.