சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல்வேலையாக, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்துகண்டுபிடிப்பதுதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஜெயலலிதா இறந்து 4 வருடங்களை கடந்துள்ள நிலையில், அவரது மர்ம மரணம் குறித்த விசாரணையும் முடங்கிப்போயுள்ளது. அத்துடன், ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தர்மயுத்தம் நடத்திய துணைமுதல்வர் ஓபிஎஸ்-ம் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துவருகிறார். இதற்கிடையில், விசாரணை ஆணையத்துக்கு அப்போலோ தொடர்ந்த வழக்கு காரணமாக, உச்சநீதிமன்றம் விதித்த தடையும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல்வேலையே, ஜெ.மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிப்பதுதான் என்று கூறினார்.

திருவாரூரில், திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளரையும் அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்டாலின்.

பிரச்சார வேனில் நின்றபடியே உரையாற்றிய  ஸ்டாலின், “திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன். கலைஞர் பிறந்த, கலைஞரை வளர்த்த இந்தத் திருவாரூர் மண்ணில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளேன். இந்த சுற்றுப்பயணத்தில் நான் உணரக்கூடிய உணர்வு, 234 இடங்களுக்கு 234 இடங்களையும் திமுக கைப்பற்றும். அதிமுக கூட்டணி வாஷ் அவுட் ஆகும் என்பதை நான் உணர்கிறேன்.

முதல் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது,  வாய்க்கு வந்தபடி சொல்லும் அத்தனையும் பொய்யாகவே உள்ளது. ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞர், ஸ்டாலின்தான் என முதல்வர் கூறியிருக்கிறார்.

ஸ்டாலின்தான் காரணம் என்றால் இந்த நான்காண்டு காலமாக என்ன பண்ணிக்கொண்டிருந்தீர்கள்? ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணம் என வழக்கு போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார். நீங்கள் தயாரா? நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி நீங்கள் ரெடியா?” என்றார்.

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக நான்கு வருடங்களாக விசாரணை கமிஷன் நடந்து வரும் நிலையில் இதுவரை உண்மை வெளிவரவில்லை. ஏழெட்டு முறை துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு விசாரணை கமிஷனுக்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பியும் இதுவரை அவர் செல்லவில்லை. ஜெயலலிதாவிற்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறந்துபோனது ஒரு முதலமைச்சர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மரணத்தைக் கண்டுபிடிப்போம்” என்றார்.

நாட்டையே குட்டிச்சுவராக்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.