சென்னை: தமிழகத்தில் செப்டம்பருக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் (26ந்தேதி) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த திமுக மாவட்ட செயலாளர்களுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம்,கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.