சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை தங்கச்சாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வைகோ, பெ.சண்முகம், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்ஐஆருக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் திமுக கூட்டணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன
2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR – Special Intensive Revision) முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வீடு தோறும் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த படிவங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, மாற்றம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த நடைமுறையில் முறைகேடு மற்றும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக திமுக சார்பில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்திலும், வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ஜனநாயக முறையை பாதிக்கும் வகையில் உள்ளது எனவும், தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து எஸ்ஐஆருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இன்று மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தங்கசாலை பகுதியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல், தமிழகம் முழுவதும் திமுக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆகியோர் தங்கள் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.