சென்னை:

திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சு வார்த்தைகளை தமிழக அரசி யல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. அதிமுக பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி மற்றொரு புறம்  நடைபெற்று வருகிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி, டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தி உள்ள நிலையில், இன்று மாலை மீண்டும் ராகுலை சந்தித்து கூட்டணி குறித்து இறுதி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர மேலும் சில கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளும் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் வகையில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசுவதற்காக திமுக மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி டில்லிக்கு புறப்பட்டு சென்றிருப்பதாகவும், இன்று பிற்பகல் ராகுல் உடனனா சந்திப்பிற்கு பிறகு, தமிகத்தில்  திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை  இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை உறுதி செய்யும் வகையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில்,  திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட  10 தொகுதி கள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.