சென்னை,
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நன்றாக குணமடைந்து வருகிறார் என்று காவேரி மருத்துவமனை அறிவித்து உள்ளது. தற்போது கருணாநிதி டி.வி. பார்க்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது கருணாநிதி நலமோடு இருப்பதாகவும், டிவி பார்த்து நேரத்தை செலவிடுகிறார் என்றும், தற்போது எடுத்துவரும் நோய் தடுப்பு மருந்துகள் முடிவடைந்ததும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படு வார் என்றும் காவேரி மருத்துவமனை அறிவித்து உள்ளது.
கடந்த 15ந்தேதி இரவு மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை உடனடியாக மீண்டும் காவேரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது..
அவருக்கு நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பதால் தொண்டையில் துளை போடப்பட்டு சுவாச குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திமுக தலைவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டெல்லயில் இருந்து சென்னை வந்தார். மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து சென்றனர்.
கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அவர், நாற்காலியில் அமர்ந்து டி.வி. பார்க்கிறார், பத்திரிகைகளையும் படிக்கிறார். இருப்பினும் தற்போது உட்கொண்டு வரும் மருந்துகள் முடிவடையும் வரை அவர் மருத்துவமனையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இன்னும் ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.