சென்னை: சென்னையை அடுத்த திருவிடந்தையில் இன்று திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்,1.50 லட்சம் பேர் பங்கேற்குபார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு பாடம் புகட்டுவது தொடர்பாக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக மண்டல வாரியாக இளைஞரணி, மகளிரணி மாநாடுகள், 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை, வீடுவீடாக பரப்புரை என்று களமிறங்கியுள்ளது.
தனது கட்சிப் பணிகளையும் மிக தீவிரமாக திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது. அதன் முக்கிய பகுதியாக வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி மாநாடுகளை நடத்துகிறது. அதன்படி பிப்ரவரி 11ம் தேதி (இன்று) சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாட்டை காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையிலும், பிப்ரவரி 14ம் தேதி வடக்கு மண்டல மாநாட்டை திருப்பத்தூரிலும், பிப்ரவரி 21 அன்று தெற்கு மண்டல மாநாட்டை மதுரையிலும், பிப்ரவரி 27ம் தேதி மேற்கு மண்டலத்திற்கான மாநாட்டை கோவையிலும் நடத்திட திமுக திட்டமிட்டுள்ளது.
திமுக வாக்குச்சாவடி அளவிலான வலுவான கட்டமைப்பை ‘என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இயக்கத்தை முன்னெடுத்து உருவாக்கி வைத்திருக்கிறது. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ), 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (பிஎல்சி) மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (பிடிஏ), வாக்குச்சாவடி இளைஞர் அணி (பிஒய்ஓ) ஆகியோரை தேர்தல் பணிக்கு முழுமையாக தயார் செய்யும் வகையில் ’என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்கிற தலைப்பில் வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடுகளை நான்கு மண்டலங்களில் நடத்துகிறது திமுக.
இதன் முதல் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் இன்று நடக்கிறது. சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 1.5 லட்சம் வாக்குச்சாவடி குழுவினர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். வருகின்ற 2026 தேர்தலில் திமுகவினர் எப்படி களப்பணி ஆற்ற வேண்டும், எதிர்க்கட்சியினருக்கு எப்படி பதிலளிக்க வேண்டும், வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்குகிறார். கட்சியின் வாக்குகளை அதிகரிக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்ச வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்று முகவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 1ம் தேதி முதல் திமுக தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது. ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் 22 நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டு, இந்த குழுவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் கருத்துகளை கேட்டு வருகிறது. இந்த வரிசையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் இந்த பிரமாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நடக்கிறது. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் திமுகவின் இலக்கு. அதற்கு இந்த வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு முக்கிய பங்காற்றும் என திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
* கட்சியின் வாக்குகளை அதிகரிக்க ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்ச வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்று முகவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]