புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என திமுக கோஷம் எழுப்பி உள்ளது.

மார்ச் மாதம்  23 அன்று புதுச்சேரியின் 15வது சட்டசபையின் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது.   அன்று முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களது கூட்டணி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆயினும் அன்று ஒரே நாளில் அனைத்து அலுவல்களும் இயற்றப்பட்டு கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இம்மாதம் 30ம் தேதி இரண்டாம் கூட்டத்தொடர் கூட்டப்படும் என பேரவை தலைவர் செல்வம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் சட்டப்பேரவையில் மீண்டும் கூட்டப்பட்டது.  முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவா மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வாக்குறுதிகளை நிறைவேற்றங்கள் என்ன ஆனது என கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். மேலும்  சட்டப்பேரவை வளாகத்தில் ஒன்று திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கோஷங்களை எழுப்பினார். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.