சென்னை:
சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வற்புறுத்தினார். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.
இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பெரும் அமளி ஈடுபட்டனர். இந்த அமளியில் தான் தாக்கப்பட்டதாகவும் தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தனபால் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் சபைக்குள் புகுந்த காவலர்கள் திமு.க. எம்.எல்.ஏக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த தள்ளுமுல்லுவில் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதாகவும் தனக்கும் அடி விழுந்ததோடு தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திமுக எம்.எல்.ஏக்கள் சாலை மறியிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். மேலும், ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார்.
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபையில் திமுகவினர் மீதான தாக்குதலைக் கண்டித்து வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.