சென்னை: ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கொரோனா தொற்று தொடக்கம் முதலே தமிழக அரசின் செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வந்தன.
இந் நிலையில், தமிழக அரசு மேற்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட 11 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
2 மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு மேற்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 2 மாதங்களுக்கு மேல் அமலில் உள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு 7,500 ரூபாயும், தமிழக அரசு 5,000 ரூபாயும் நிவாரணம் அளிக்க வேண்டும்.
முதுநிலை மருத்துவப்படிப்புகளில் ஓபிசி பிரிவினர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் ரத்து மின் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும்.
கொரோனா பேரிடரிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் மிக முக்கியப் பணியில்  மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தமிழக காவல்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியாளர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.