சென்னை: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு அதிகரிக்காததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் திருவாரூரில் இன்று (நவ. 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதன்பேரில் ஒன்றிய அரசு அதிகாரிகள் குழு வருகை தந்த 3 நாட்கள் ஆய்வு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். ஆனால் நெல்லின் ஈரப்பதம் தளர்த்தப்படாது என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.

இதை தொடர்ந்து,  மத்திய அரசின் நிராகரிப்பைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.  நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் இன்று திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக,  நெல் ஈரப்பத்தை உயர்த்துவது தொடர்பாக, கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த ஒன்றிய குழுவினர், நெல்மணிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றதுடன் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர். தற்போது நிராகரித்திருப்பது ஒன்றிய குழுவின் நாடகத்தை காட்டுகிறது.

விவசாயிகள் மீது பிரதமருக்கு அக்கறை இருந்தால் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். கோவையில் நடந்த இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகள் பற்றி பெருமையாக பேசி சென்ற மறுநாளே நெல் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கை நிராகரிப்பு என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது தமிழக விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு செய்யும் துரோகம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.