தேனி: திருச்சியில் மார்ச் மாதம் 14ஆம் தேதி 11வது தி.மு.க மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மைச்செயலாளர் கே.என். நேரு செய்யத் தொடங்கி விட்டார். ஏற்கனவே மாநாடு நடைபெறும் திடலை ஸ்டாலின் பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பொதுவாக திமுக மாநாடு, ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு திமுக மாநாடு ஒரே ஒருநாள் மட்டுமே நடத்த திட்ட மிடப்பட்டு உள்ளது. சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளநேரத்தில் நடைபெறும் மாநாடு, திமுக மாநாடு, தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என திமுகவினர் கூறி வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்,மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திமுக ஆட்சி அமையும் என்று உறுதியாகி கூறி வருகிறார். அதன்படி, மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களையும் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், துணைமுதல்வர் ஓபிஎஸ் தொகுதியான தேனியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்து, மக்களை சந்தித்து வரும், ஸ்டாலின், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? என்று கேள்வி எழுப்பியதுடன், தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் எதையும் பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை. துணை முதல்-அமைச்சர் ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவர் யாருக்கும் உண்மையாக இல்லை. மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார் என்று கூறியவர், இறுதியில், திருச்சியில் மார்ச் 14ஆம் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.