சென்னை: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. அதிமுக, திமுக கூட்டணியில் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு பிரச்சாரத்தில் அக்கட்சிகள் கவனம் செலுத்த ஆரம்பித்து உள்ளன.
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிய நிலையில் அமமுக, மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், தேமுதிக தனித்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
தனித்து போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 10 மணியளவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் பட்டியல் வரும் 14ம் தேதி வெளியாகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக, நாம் தமிழர், மநீம தனித்து களமிறங்கும் நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது.