சென்னை: ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.  உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிபோல சென்னை மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என தேமுக தலைவர்  விஜயகாந்த், தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளர். மழை நீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் மழைநீர் அகற்றப்பட்டு விட்டதாக முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறி வருகின்றனர். ஆனால் வடசென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அதை அகற்றும் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. அரசு அதிகாரிகளும், மாநகராட்சியும், மத்திய சென்னை, தென்சென்னையில் அதிக ஆர்வம் காட்டும் நிலையில், வடசென்னை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மழை பாதிப்பு குறித்து, தேமுக தலைவர் விஜயகாந்த் தமிழகஅரசை கடுமையாக சாடியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்,  , ‘சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. குறிப்பாக முதல்வர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர்.

குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

ஒருபுறம் மெட்ரோ பணிகள் மறுபுறம் மழைநீர் வடிகால் பணிகள் என்று ஏற்கனவே சென்னை மாநகரம் முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல தற்போது பெய்து வரும் மழையால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

மழைநீர் வடியாத இடங்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.