சென்னை:

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று திமுக தலைவர் மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாள் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையைச்சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்பழகன் காணப்படாதது திமுக தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

கலைஞர் பிறந்தநாளை பரபரப்பாக கொண்டாடும் ஜெ.அன்பழகன், சமீப காலமாக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். தொடர்ந்து பல இடங்களுக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கி வந்த அன்பழகன் கடந்த சில நாட்களாக உடல்நிலைபாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று உடல்நிலை மேலும் பாதிக்கப்பட, உடனடியாக நேற்று இரவு குரோம்பேட்டையில் உளள திமுக எம்.பி.  ஜெகத்ரட்சகனின் மருத்துவமனையான ரேலா இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

மேலும், ஏற்கனவே அன்பழகன் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் மட்டுமின்றி பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து,  அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வருவதாக  மருத்துவ மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.