பெங்களூரு:

ர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக  முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளது. டி.கே.சிவகுமார், காங்கிரஸ் ஆட்சியின்போது, மாநில நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு (2019) டிசம்பர்  5ந்தேதி  நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், அதற்கு பொறுப்பேற்று, முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவருமான சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும், மாநில  தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, தற்போதுவரை மாநில தலைவர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை  கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்து உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அதன்படி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.கே. சிவகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செயல் தலைவர்களாக ஈஸ்வர் கந்த்ரே, சதீஷ் ஜார்கிஹோலி, சலீம் அகமது ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன்,  கர்நாடக மாநில மேலவை தலைவராக எம் நாராயணசாமியும், மாநில சட்டமன்ற தலைவராக அஜய்சிங் எம்எல்ஏவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.