டாக்டர் கே.எஸ். சரவணன் (முந்தைய பகுதியின் தொடர்ச்சி)
முந்தைய அத்தியாத்தில் தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன், அதன் வகைகள் குறித்து பார்த்தோம்.
இந்த பகுதியில், தலைசுற்றல் ஏற்பட்டால் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பார்ப்போம்.
பரிசோதனைகள்
முதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போதே முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அப்போதுதான் சரியான காரணத்தை அறிந்து, சிகிச்சை பெற முடியும்.
மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மறுபடி மறுபடி ஏற்படும் பிரச்சினை. ஆகவே ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை பிரச்சினை ஏற்படும்போது பயப்படத் தேவையில்லை. எளிதாக சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.
சாதாரணமாக தலைச்சுற்றல் ஏற்பட்டவருக்கு, உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனையும் தேவை. ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் செய்வதும் நல்லதே. சிலசமயங்களில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் செய்வார்கள்.
சிகிச்சை
தலைச்சுற்றல் ஏற்பட ஏராளமான காரணங்கள் உண்டு என்பதால் முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை அளிக்கப்படும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையை தீர்க்க தற்போது பல்வேறு சிறந்த மருந்துகள் இருக்கின்றன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு அளித்து, தலைச்சுற்றலை போக்கும்.
வேறு சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி தலைசுற்றலை நிறுத்தும்.
மினியர் தலைசுற்றல் என்றால், காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்த வேண்டியிருக்கும். இப்போது ஊசி தேவையில்லை. மாத்திரைகள் இருக்கின்றன.
இவற்றில் குணம் ஏற்படவில்லை என்றால் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.
பயிற்சிகள்
‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ஏற்பட்டால் மருந்து மாத்திரைகளால் மட்டுமே தீர்வு காண முடியாது. சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் கட்டாயம்.
படுத்துக்கொண்டு, கண்களைச் சுழற்றுதல், அமர்ந்துகொண்டு கழுத்துத் தசைகளையும் தோள்பட்டைத் தசைகளையும் அசைத்தல், தலையை முன்னும் பின்னும் மற்றும் பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடிப்பது போன்ற பயிற்சிகள் உதவும்.
இவற்றைக் காது மூக்கு – தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்யவேண்டும்.
தலைசுற்றல் ஏற்பட்டால்
@ தலை சுற்றுவதுபோல் இருந்தால் உடனடியாக தரையில் படுத்துக்கொண்டு, கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
@ படுக்கமுடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் தலைசுற்றல் குறைந்துவிடும்.
தலை சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள் செய்ய வேண்டியது…
@ படுக்கையை விட்டு எழும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழ வேண்டும்.
@ எழுந்தவுடனேயே நடந்து செல்ல சற்று நிதானிக்க வேண்டும். அதாவது படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடக்க முயற்சிக்க வேண்டும்.
@ படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்க கூடாது.
@ தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது.
@ அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதிப்பது நல்லது. ஏனென்றால் தலைச்சுற்றல் ஏற்பட்டால் இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்ளலாம். கீழே விழாமல் தப்பிக்கலாம்.
@ குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே அமைத்துக்கொள்ள வேண்டும்.
@ அவசியம் இரவு விளக்குகள் இருக்க வேண்டும்.
@ தேவையின்றி அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதை தவிர்க்க வேண்டும்.
@ வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
@ வருடத்துக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்வது அவசியம்.
தலைச்சுற்றலை தடுக்கம் வழிகள்..
@ சாப்பாட்டில் கொழுப்பு, உப்பைக் குறைக்க வேண்டும்.
@ போதுமான அளவு உடலுக்கு ஓய்வும் உறக்கமும் தேவை.
@ ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
@ புகை, மது, போதை மாத்திரை தவிர்க்க வேண்டும்.
# இதையெல்லாம் செய்துவந்தால், எந்த நிலையிலும் தலைச்சுற்றல் ஏற்படாமல் மகிழ்ச்சியோடு வாழலாம்.