சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் 21ந்தேதி முதல் 3 நாள் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்காகவும் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அக்டோபா் 21 முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுப் பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
அதன்படி, கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி,திருச்செந்தூா், நாகா்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட ஊா்கள், மயிலாடு துறை, நாகப்பட்டினம், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா்,திண்டுக்கல், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆந்திர மாநிலத்துக்கும், பூந்தமல்லி மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், ஓசூா் ஆகிய ஊா்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல், தாம்பரம் சானிட்டோரியம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய ஊா்களுக்கும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் அருகில் இருந்து திருவண்ணாமலைக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மாா்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக இயக்கப்படும். மேலும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் ஆகிய பகுதிகளுக்கும், புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.
கே.கே.நகா் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு அக்டோபா் 21 முதல் 23-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக அம்பத்தூா் நோக்கி திருப்பி விடப்படும்.
மாதவரம் ரவுண்டானா, மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி சாலை, காவாங்கரை, செங்குன்றம் வழியாக வெளிவட்ட சாலை வழியாக செல்ல வேண்டும். 100 அடி சாலை பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து 100 அடி சாலை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஈவெரா பெரியாா் சாலை வழியாக செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவங்கரை சந்திப்பு, நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணா நகா் 3, 2-ஆவது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூா் தொழிற்பேட்டை சாலை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். தாம்பரம், பெருங்களத்தூா் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியாா் வாகன ஓட்டுநா்கள் கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலையைப் பயன்படுத்தி செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.