சென்னை: தீபாவளி மதுவிற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும், ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என தெரிவித்து உள்ளது.
தீபாவளியையொட்டி ஒரே நாளில் மட்டும் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழ்நாடு அரசு, மக்களை குடிகாரர்களாக்கும் மதுவிற்பனையை குறைப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. பொதுவாக தீபாவளியையொட்டி பெரும்பாலான நிறுவனங்களில் சிறிதேனும் போனஸ் வழங்கப்படும் என்பதால், பலர், அந்த பணத்தைக் கொண்டு குடித்து கும்மாளவிடும் நடவடிக்கையே அதிகரித்து உள்ளது. இதை கருத்தில்கொண்டே தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மதுவிற்பனையை அதிகரிக்க போதுமான அளவுக்கு ஸ்டாக் வைத்து, விற்பனை செய்து வருகிறது
டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 4829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட வலியுறுத்தி வருகின்றன. கடந்த மாதம் வி.சி.க சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. ஆனால், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, மதுவிலக்கு என்ற வார்த்தையே கேட்க விரும்பாமல், மக்கள் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுபானக் கடைகளை 24மணி நேரமும் திறந்து வைத்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.438.53 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி விற்பனை குறைந்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான (அக்டோபர் 30ந்தேதிஸ்ரீகடந்த த புதன்கிழமை ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி பண்டிகையான (அக்.31ந்தேதி) வியாழக்கிழமை ரூ.235.94 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனம், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை என 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. அதில் அதிகபட்சமாக புதன்கிழமை சென்னை மண்டலத்தில் ரூ.47.16 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.54.18 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது.
குறைந்த அளவில் மதுவிற்பனை நடைபெற்ற மண்டலமாக கோவை உள்ளது. கோவை மண்டலத்தில் புதன்கிழமை ரூ.36.40 கோடிக்கும், வியாழக்கிழமை ரூ.42.34 கோடிக்கும் கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்தில் புதன்கிழமை ரூ.40.88 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.47.73 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மண்டலத்தில் புதன்கிழமை ரூ.39.81 கோடிக்கும், தீபாவளி பண்டிகை நாளான வியாழக்கிழமை ரூ.46.51 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்.24-ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபாவளியன்று ஒரே நாளில் மட்டும் ரூ.256 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை மற்றும் பண்டிகைக்கு முந்தைய நாள் சேர்த்து ரூ.467.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
இந்த ஆண்டு ரூ.29.10 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதுபானங்கள் விற்பனை குறைந்ததற்கு மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வந்ததே காரணம் என கூறுகின்றனர்.
ஆனால், 1,500 அரசு மதுபான கடைகள் குறைந்தாலும், தனியார் மனமகிழ் மன்றங்கள், உணவக விடுதிகளுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதே அரசு மதுபான கடைகளில் மதுபான விற்பனை குறைந்ததற்கு காரணம் என டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.