சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, எழும்பூர்-நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு வழக்கமான கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பராமரிப்பு பணி காரணமாக தேஜஸ் ரெயில் நாளை (08/11/23) இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, நகர்ப்புறங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழக்கமான ரயில்களுடன், நெல்லை சென்னை, சென்னை நாகர்கோவில், சென்னை பெங்களூர், சென்னை மங்களூர் என பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில்களின் அனைத்து இடங்களும் நிரம்பிய நிலையில், பொதுமக்கள் மேலும் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் – நெல்லை இடையே நாளை (9ந்தேதி) வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் , தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை (9-ந்தேதி) காலை 6 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) புறப்பட்டு அதே நாள் மதியம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு மதியம் 3 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06068) இரவு 11.15 மணிக்கு எழும்பூர் ரெயில்நிலையம் வந்தடையும்.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் (வண்டி எண். 06070) நாளை (9-ந்தேதி), 16 மற்றும் 23-ந்தேதிகளில் மாலை 6.45 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.35 மணிக்கு எழும்பூர் சென்றடையும். இதேபோல மறுமார்க்கமாக, சிறப்பு ரெயில் (06069) 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டி எண் 06069/06970 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 10-11-2023, 17-11-2023, 24-11-2023 ஆகிய மூன்று நாட்கள் வெள்ளிக்கிழமைகளில் மாலை 3-00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புகோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து 09-11-2023, 16-11-2023, 23-11-2023 ஆகிய மூன்று நாட்களில் (வியாழக்கிழமை) மாலை 6-45 மணிக்கு புறப்படும்.
இந்த சிறப்பு விரைவு ரயிலில்
AC Two Tier – 1
AC Three Tier – 6
SL Class – 9
GS (UR) – 4
சரக்கு பெட்டி – 1
மாற்றுத்திறனாளிகள் பெட்டி – 1 என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேஜஸ் ரெயில் பராமரிப்பு பணி காரணமாக நாளை இயங்காது. எனவே, அந்த வழித்தடத்தில் கூடுதலாக எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.