சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடி இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த பண்டிகையை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாட நகர்ப்புறங்களில் பணி நிமித்தமாக வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். நடப்பாண்டு, தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 மாதத்திற்கு முன்பே ரயில்களில் முன்பதிவு தொடங்கும்.
அதன்படி, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 12) தொடங்கியது. , நவம்பர் 9ஆம் தேதி ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொங்கியது. நவம்பர் 10ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13ஆம் தேதி முதலும், நவம்பர் 11ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14ஆம் தேதி முதலும், நவம்பர் 12ஆம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15ஆம் தேதி முதலும் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.