பெங்களூரு
ராஜிவ் காந்தியின் லட்சத்தீவு பயணம் குறித்து பொய்யான அவதூறு பரப்பியவர்களுக்கு திவ்யா ஸ்பந்தனா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ஐஎன்எஸ் விராட் எனப்படும் இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலை விடுமுறை சுற்றுப்பயணத்துக்கு பயன்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அவரது இந்த பேச்சுகடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அப்போதைய ராணுவ தளபதி ராமதாஸ், லட்சத்தீவின் அப்போதைய ஆளுநர், அந்த கப்பலின் துணை தலைவர் வினோத் பச்சாரியா உள்ளிட்ட பலரும் மறுத்துள்ளனர். ராஜிவ் காந்தி விடுமுறை சுற்றுலா செல்லவில்லை எனவும் அரசு முறை பயணம் செய்தார் எனவும் ஆதாரத்துடன் விளக்கி உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் மீடியா தலைவரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டரில், “ராஜிவ் காந்தியின் லட்சத்தீவு பயணத்தைப் பற்றி ராணுவ தளபதி ராமதாஸ் விளக்கி உள்ளார்.
இப்போது உலகமகா பொய்யர் நரேந்திர மோடி மற்றும் அவரை போலவே பொய் சொல்லி ராஜிவ் காந்தியின் புகழைக் கெடுத்தவர்கள் மன்னிப்பு கேட்பார்களா?
அல்லது அது போன்ற அருவருப்பான மக்களிடம் இதை எதிர்பார்ப்பது நமது தவறா?” என பதிந்துள்ளார்.