மும்பை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு வாரத்திற்குள்ளாகவே பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகி மாறி பொதுமக்கள் நடப்பதற்கு கூட லாயக்கற்று உள்ளது. இந்த நிலையில், மும்பையில், சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து புகார் கொடுத்தால் ரூ.500 பரிசு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது.

இது,  அந்த மாநில பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல தமிழகத்திலும் அறிவிக்கப்படுமா? சாலைகள் செப்பனிடப்படுமா என்று சென்னை மக்கள் ஏங்கிக் தவிக்கிறார்கள். 

மும்பையில் பருவமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, சாலைகள் உடனே செப்பனிடப்பட்டன. இந்த நிலையில்,  மும்பை மாநகராட்சி புதிய சவால் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி,   சாலையில் 3 அங்குல ஆழம், ஒரு அடி நீளத்துக்கு மேல் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள், மொபைல் செயலி வாயிலாக புகார் செய்யலாம். அந்தப் பள்ளங்கள் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும். இந்த காலக்கெடுவுக்குள் பள்ளம் சீரமைக்கப்படாவிட்டால் புகார்தாரருக்கு ரூ.500 வழங்கப்படும். இந்த சவால் திட்டம் வரும் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பை மாநகராட்சியின் இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி இதுபோல் அறிவிக்குமா?