சென்னை: மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக ரூ.2 கோடியில் ‘மகிழ் முற்றம்’ என்ற திட்டத்தின் கீழ் மாணவர் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கான ( ‘மகிழ் முற்றம்’ ) இலச்சினையை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு மகிழ் முற்றம்’ இலச்சினையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது, பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் மகிழ் முற்றம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். மாணவர்கள், மாநில மற்றும் மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொறுப்பு வழங்கப்படும். இதனால் மாணவர்களின் தலைமை பண்பு வளரும் என்றார்.
பின்னர், மழை பாதிப்பு குறித்தும், மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமூறை அறிவிக்கப்படுவதாக தாமதமாகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய அமைச்சர், மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் சில நேரங்களில் மழை குறித்த கணிப்பு பொய்த்து விடுவதால், தாமதங்கள் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலம் அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே இந்த விஷயத்தில் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டு இருபபதாகவும் தெரிவித்தார்.
மகிழ் முற்றம் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன்மூலம் மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை, நாடாளுமன்றம் நடத்தப்படும். இதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இந்தத் திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மகிழ் முற்றம் மாணவர் குழு கட்டமைப்பின் கீழ் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் குறிஞ்சி, முல்லை உட்பட 5 குழுக்களாக பிரிக்கப்படுவர். இக்குழு அமைப்பில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இடம்பெறுவர். ஒவ்வொரு வகுப்பிலும் பயிலும் மாணவர்கள் இந்த குழுக்களில் சேர்க்கப்பட்டு அதன் விவரம் எமிஸ் தளத்தின் மூலமாக கண்காணிக்கப்படும்.
அந்த நிகழ்வின் படங்கள், காணொலியை எமிஸ் தளத்தில் நவம்பர் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த குழுக்களின் செயல்பாடுகள் மாதந்தோறும் மதிப்பீடு செய்யப்பட்டு புள்ளிகள் கணக்கிடப்படும். அதிக புள்ளிகளைப் பெறும் குழுவானது அந்த மாதத்தின் வெற்றிக் குழுவாக அறிவிக்கப்பட்டு அதன் வண்ணக்கொடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கும் எதிர்வரும் மாதம் முழுவதும் காட்சிப்படுத்த வேண்டும்.
இதுகுறித்த தகவல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.