காஞ்சிபுரம்:

முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிப் பெண்கள் அத்திவரதர் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது.


வரதராஜர் பெருமாள் கோயிலில் உள்ள திருக்குளத்தில் சயனித்து வந்த அத்திவரதர் 40 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 48 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அவர் தரிசனம் தருவதால், அவரைக்காண நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வருகிறது.

தினசரி ஒரு லட்சத்துக்கும் அதிகமான  பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கானோர் வந்துகொண்டே இருக்கின்றனர்.  இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே 4 பேர்  உயிரிழந்த நிலையில்,  அத்திவரதர் தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4 மணி முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை பிடிப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றையநாளிதழ்களில் விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் தளர்ந்த முதியோர்கள், உடல் நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள்மற்றும் அவர்களை அழைத்து வருவோர் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வினை கூடுமானவரை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.