சென்னை: ஜூன் 3ந்தேதி மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான  மு.க.ஸ்டாலின் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் பணியை நாளை சென்னையில்  தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, பொதுஊரடங்கு 7ந்தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4ஆயிரம் அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.2 ஆயிரம் இந்த மாதம் கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில்,  ‘பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம், ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பபட்டது.

அதைத்தொடர்ந்து,  மளிக்கை பொருட்கள் அனைத்து நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் குடோனுக்கு தற்போது கொண்டு, கார்டுதாரர்களுக் விநியோகம் செய்யும் வகையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து பொருட்களும் ஒவ்வொரு துணிப்பையில் போடப்பட்டு, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த மளிகை தொகுப்பு ஜூன் 3ந்தேதி (நாளை) மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, விநியோகம் செய்யும் திட்டத்தை முதல்வர்  ஸ்டாலின் நாளை  தொடங்கி வைக்கிறார்.

அத்துடன், கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டமும், நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

அதையடுத்து, வரும் 5ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

13 வகையான மளிகை பொருட்கள் என்னென்ன?

கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, கடலைப் பருப்பு, டீத்தூள், கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், சோப்பு ஆகிய 13 பொருட்கள் துணிப்பையில் வைத்து  இந்த தொகுப்பில் வழங்கப்பட உள்ளது.