பணிச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, வணிகம் உள்ளிட்டவைகளைக் கடந்து தனிமனித உணவு மரபிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆம் உலகெங்கிலும் மக்களின் உண்ணும் நடைமுறையில் பல சிக்கல்கள் அரங்கேறி வருகின்றன. ஊரடங்குச் சூழல் மனிதர்களின் பரபர வாழ்க்கைக்கு மிகவும் அன்னியமான ஒன்று என்பதைவிட, அது ஏற்படுத்தும் மன உளைச்சல்தான் பலருக்கு மிகப் பெரிய நோயாக உள்ளது.
இது சார்ந்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கால் 19 வயதுப் பெண்ணான கோலே டெய்லரின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. “ஊரடங்கால் சலிப்பும், மன அழுத்தமும் ஏற்படும்போது, சாப்பிடுவதைத் தவிர என்னால் எதுவும் செய்யமுடியவில்லை” என்கிறார்.
வீட்டிலேயே இருப்பதால் மக்கள் தங்களின் உடல்நலன் குறித்து யோசிப்பது இல்லை. “நானொரு நீரிழிவு நோயாளி என்றாலும் கூட தற்போது அதிக சாக்லேட்டுகளை உண்ணுகிறேன். இதனால் என் மனவோட்டத்தை கொஞ்சம் மாற்ற முடிகிறது” ஆன்டி லெயோடின் இந்த நிலைதான் பலருக்கும்.
Obsessive Compulsive Disorder எனப்படும் கட்டாய மனப் பிறழ்வு நோயும் தற்போது அதிகரித்து வருகிறது. OCD என்பது ஒரு சில குறிப்பிட்ட செயல்களை மீண்டும் மீண்டும் செய்வதாகும்.
வீட்டிலிருக்கும் பலரும் தற்போது இந்த OCD காரணமாக அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தினால் எடை அதிகரிப்பு ஏற்பட்டு அவதியுறுகின்றனர்.
ஆன்டி லெயோடின் இது குறித்து, “தற்போதைய சூழலில் நான் எப்படி இருக்கிறேன் என்பது பற்றி இந்த துயரமான சூழலில் எனக்கு கவலையில்லை. இது எல்லாம் மாறிய பின்பு நானும் என்னை மாற்றிக் கொள்வேன்” என பதிலளிக்கிறார்.
பள்ளியில் உணவு பரிமாறும் ஆசிரியரான எமி ஹோஜ்ட்சன் நிலை வேறாக உள்ளது. “எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருப்பதால் ஃபிரிட்ஜையும், கப்போடையும் துழாவிக் கொண்டே இருக்கிறேன். என் எடை இப்போது இருமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது உடற்பயிற்சி செய்து வருகிறேன். வீட்டில் அனைவருக்கும் நான் தான் சமைக்கிறேன்” எனக் கூறினார்.
ஆஞ்சலியா பல்கலைக்கழகத்தின், ‘லாக்டவுன் காலம் நம் உணவுப் பழக்கத்தை எவ்விதம் மாற்றியுள்ளது’ எனும் சமீபத்திய ஆய்வு பல உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது.
இப்பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஆனி மற்றும் மரி(Norwich medical school and study lead on nutrition and eating behaviour) இருவரும் ஆய்வு முடிவுகளை பகிர்ந்துள்ளனர்.
பேராசிரியர் ஆனி கூறுகையில், “தற்போது இந்த உலகமே இப்படித்தான் உள்ளது. தவறான வாழ்க்கை முறைக்காக யாரும் இப்போது கவலைப் படவில்லை. எல்லாத் தவறுகளுக்கும் நிறைய சாக்கு போக்குகளை வைத்துள்ளனர். அவர்களுக்கு COVID-19 மிகச்சிறந்த சாக்காகும்” என நடைமுறையை படம் பிடித்து காட்டுகிறார்.
பேராசிரியர் மரி இது சார்ந்த உளவியலை அடையாளப் படுத்துகிறார். “தற்போது ஆரோக்கியமற்ற பழக்கங்களால் அதிகம் உண்ணுதல், கர்போனைல் பானங்களை அதிகம் அருந்துதல் உள்ளிட்ட செயல்கள் அதிகரித்துள்ளன.
இதில் ஒரு உளவியல் உண்டு. நம் உடல் மிகவும் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும் போது அதிகம் Cortisol ஐ உற்பத்தி செய்கிறது. இதனால் தான் உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறோம்”.
உண்ணும் முறைகளை மாற்ற பிரிட்டன் ஊட்டச்சத்து கழக செய்தித் தொடர்பாளர் க்ளேர் தோர்ன்டன் வுட் நம்பிக்கை ஊட்டும் வழிகளைக் கூறுகிறார். “புதிய உணவுப் பழக்கத்தால் அதிகம் கவலையுறத் தேவையில்லை. இது மிகவும் நெருக்கடியான சூழல். எனவே உங்களின் உணவுப் பழக்கம் சிறிது மாறத்தான் செய்யும். அது குறித்து வருந்தவோ, கவலைப்படவோ தேவையில்லை” என்கிறார்.
மேலும் ஒருநாளைக்கு மூன்று முறை என சரியான அளவில் உண்ண வேண்டும் எனவும், ஒரு நாளைக்கான நொறுக்குத் தீனிகளை அளவாக எடுத்து வைத்து கொள்ளவேண்டும் எனவும் க்ளேர் கூறுகிறார்.
மனவியல் நிபுணர் காரா லிசேட்டே, “தற்போது இந்த உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எதையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எனக்கான உணவு முறையை என்னால் கட்டுப்படுத்த முடியும். எனவே எமர்ஜென்சி என்பதற்காக பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்காமல் வீட்டில் செய்வதையே உண்ணுங்கள்” என தெளிவைத் தருகிறார்.
மனிதர்களின் எண்ணங்களுக்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என, புகழ்பெற்ற சைக்கோ தெரபிஸ்ட் பெர்னி ரைட் குறிப்பிடுகிறார்.
“நம் உணர்வுகள் கட்டுக்குள் இல்லாத போது நாம் உண்ணும் முறையிலும் குறைபாடுகள் தோன்றும். நம் கதவிற்கு வெளியே – நமக்கு முன்பாக இந்த உலகமே முடங்கி இருக்கும் போது நம்மால் என்ன யோசிக்க முடியும்? எப்படி, எதை சாப்பிட வேண்டும் எனும் கட்டுப்பாடுகள் மனிதர்கள் உண்பதில் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன” நாம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என நினைவூட்டுகிறார்.
கொரோனாத் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருங்கவுள்ள சூழலில் அந்நோய் சார்ந்த அச்சம் நம் எண்ணங்களையும் சிதைத்து வருகிறது.
இந்த லாக்டவுன் நமக்கு ஒரு நல்லதைக்கூட காட்டவில்லையா எனும் கேள்விக்கு தோர்ன்டன் உட் அளிக்கும் பதிலால் நம் செவிகள் நிறைகின்றன.
“அப்படியில்லை. பல்கலைக் கழகத்தில் இருந்து திரும்பிய என் பிள்ளைகளுடன் ஒன்றாக சமைத்து உண்ணுகிறேன். இந்த லாக்டவுன் ஒரு பெரிய நன்மையை நமக்குச் செய்துள்ளது. குடும்பம் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் மகிழ்ச்சியான தருணத்தை தந்துள்ளது. இதற்கு முன் நாம் அப்படியில்லை, நானும்தான்”.
உண்மைதான். கொரோனா வீட்டில் நம்மை முடக்கி வைத்தாலும் உறவுகளோடு இணைந்திருக்கும் நொடிகளை கொண்டாடுவோம். உலகின் பல பகுதிகளில் ஊரடங்கால் உணவின்றி இறக்கும் மனிதர்களோடு ஒப்பிடுகையில் நம் உணவுமுறையின் சிக்கல்கள் பெரிய வலி இல்லைதானே…
(நன்றி பிபிசி)