அகர்தலா :

திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் தேவ் தலைமையிலான பா.ஜ.க.. அரசு பதவியில் உள்ளது. அவருக்கு எதிராக சுதீப்ராய் பர்மன் தலைமையிலான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அண்மையில் இவர் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று மத்திய பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பிப்லாப்பை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தினர்.

இந்த நிலையில், திரிபுரா மாநில பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள விநோத் சொங்கர் நேற்று திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவுக்கு சென்றிருந்தார்.

அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அவரை பர்மன் தலைமையிலான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து, பிப்லாப்பை முதல்- அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரையும் தனித்தனியாக சந்தித்து முதல்-அமைச்சரை மாற்றும் விவகாரம் குறித்து மத்திய தலைவர்களிடம் அறிக்கை அளிப்பதாக விநோத் சொங்கர் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி