கரூர்: கரூர் அருகே அரசு பேருந்தில் பெண் பயணிக்கு அவமரியாதை செய்த ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதுடன், அவர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், கரூர் டூ ஆலமரத்துபட்டி சென்ற அரசு நகரப்பேருந்து, கோடங்கிபட்டி வந்த போது அங்கு ஒரு தாய், மகள் இருவரும் ரேஷன் கடை பொருட்கள் வாங்கிக்கொண்டு பேருந்தில் ஏற முயன்றனர். அப்போது, அந்த பேருந்தில் சிறுமி ஏறிய நிலையில், தாய் ஏறுவதற்கு முன்னர் பேருந்தினை ஓட்டுநர் எடுத்ததால், அந்த பெண், அந்த சிறுமியின் தாய் என் பிள்ளை, என் பிள்ளை என்று கதறி பேருந்துபின்னார் ஓடி வந்தார். இதைக்கண்ட அந்த பகுதி மக்கள், அந்த பேருந்தினை துரத்தி பிடித்து, சிறைபிடித்துள்ளனர். குழந்தையை ஏற்றிவிட்டு, தாய் ஏறுவதற்கு முன்பே எதற்காக பேருந்தை ஏன் எடுத்தீர்கள் என்று பொதுமக்கள் பேருந்து நடத்துனரிடமும், ஓட்டுனரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போதும் பேருந்து நடத்துனர், ஓட்டுநர்கள் எதிர்வாதம் செய்ததுடன், பேருந்தை விட்டு இறங்காமல் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பான விடியோ வைரலானது.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம் ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு, காரைக்குடி மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.