முதல்வர் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்படுவதாக அ.தி.மு.க. அணிகளிடையே பூசல் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பி.எஸ். தரப்புக்கும் , டிடிவி தரப்புக்கும் இரட்டை இலை சின்னத்தைப் பெற போட்டி நிலவியது. இந்த நிலையில் முதல்வர் – துணை முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதையடுத்து அந்த அணியே உண்மையான அ.தி.மு.க. என்று உருவாகியுள்ளது.
இந்த நிலையில் அக் கட்சியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகளிடையே பூசல் ஏற்பட்டுள்ளது.
இன்று மதுரை அருகே உள்ள தோப்பூரில் 100 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஏற்றி
வைத்தார். இந்த நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த விழாவுக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், ” இரட்டை இலை மீட்பு மாபெரும் கொண்டாட்டமாம். முப்பெரும் விழாவாம். கட்சி கொடி ஏற்றுவார்களாம். யாருக்கும் அழைப்பு இல்லை. தகவலும் இல்லை. தலைவர்கள் உட்பட. மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போலும்” என்று தெரிவித்துள்ளார்.
இது இரட்டை இலை சின்னம் கிடைத்திருந்தாலும் கூட அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து அஸ்பயர் சுவாமிநாதன், “ 15 நாட்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு தான் விழா நடைபெற்றிருக்கும்; விழாவிற்கான கம்பமோ, கல்வெட்டோ ஒரே இரவில் தயார் செய்திருக்க முடியாது.
இந்த நிலியல் ஓ. பன்னீர்செல்வத்தை திட்டமிட்டே புறக்கணித்துள்ளனர்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.