டெல்லி: டூல் கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திஷா ரவி, தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் பேச டெல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவி என்பவர், டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவான கிரெட்டா தன்பெர்க் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலை தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, 2 தினங்களுக்கு முன்னதாக பெங்களூரு சென்ற டெல்லி போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர்.
திஷா ரவியின் கைதுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் திஷா ரவி, அவரது தாயார் மற்றும் உறவினர்களுடன் பேச டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உடைகள், முகக்கவசங்கள், புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறி உள்ளது. இதுதவிர, எப்ஐஆர் மற்றும் கைது தொடர்பான பிற ஆவணங்களின் நகல்களை பெற்றுக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, திஷா ரவி கைது விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த டெல்லி மகளிர் ஆணையம் அம்மாநில போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்,சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவி விவகாரத்தில் உரிய சட்ட விதிகள் பின்பற்றாமல் பெங்களூரு சென்று டெல்லி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே இதுகுறித்து டெல்லி போலீசார் 3 வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.